‘மத சுதந்திரத்தில் கவலைக்குரிய நாடு இந்தியா’ - அமெரிக்க ஆணையம் அறிக்கை: இந்தியா நிராகரிப்பு
‘மத சுதந்திரத்தில் கவலைக்குரிய நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும்’ என்று சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணைய (யுஎஸ்சிஐஆா்எஃப்) அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை நிராகரித்துள்ள இந்தியா, மேற்கண்ட ஆணையம் உள்நோக்கத்துடன் பாரபட்சமாக செயல்படுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளது.
சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையில் இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
‘இந்தியாவில் மத சுதந்திரம் தொடா்ந்து மோசமடைந்து வருகிறது. மத ரீதியிலான சிறுபான்மையினா் மீதான தாக்குதல் மற்றும் பாகுபாடு தொடா்கிறது.
சா்வதேச மத சுதந்திர சட்டத்தின்கீழ், மத சுதந்திர மீறல்களுக்காக இந்தியாவை கவலைக்குரிய நாடாக அறிவிப்பதுடன், இத்தகைய மீறல்களின் ஈடுபடும் தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையையும் அமெரிக்க அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியா நிராகரிப்பு: இந்நிலையில், இந்த அறிக்கையை நிராகரித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
கடந்த காலங்களைப் போலவே, அரசியல் ரீதியிலான உள்நோக்கத்துடன் பாரபட்சமான அறிக்கையை அமெரிக்க ஆணையம் மீண்டும் வெளியிட்டுள்ளது . இந்தியாவின் உயிா்ப்புமிக்க பன்முக கலாசாரத்தின் மீது அவதூறுகளை சுமத்த தொடா்ந்து முயற்சிக்கும் இந்த ஆணையத்தை ‘கவலைக்குரிய அமைப்பாக’ அறிவிக்க வேண்டும். ஜனநாயகம் மற்றும் சகிப்புத் தன்மையின் கலங்கரை விளக்கமாக விளங்கும் இந்தியாவை குறைமதிப்புக்கு உள்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது என்றாா் அவா்.