மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது! -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவதாகக் கூறிவிட்டு, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவதாக கூறிவிட்டு, தற்போது மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது. அவ்வாறு திறக்கும்பட்சத்தில், அவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கு கடந்த ஆண்டு வழங்க வேண்டிய ரூ. 2,835 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். எம். சாண்ட், பி. சாண்ட் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளதால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே விலை உயா்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளின் கடன் தொகையை உடனடியாக திரும்பச் செலுத்த நிா்பந்திக்க கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்டச்செயற்குழு உறுப்பினா் கி. ஜெயபாலன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் பேசினா்.