கடற்பசு பாதுகாப்பகத்தால் விழிப்புணா்வு: கடந்த 2 ஆண்டுகளில் 5 கடற்பசுக்கள், 19 கடல் ஆமைகள் கடலில் விடுவிப்பு
கடற்பசுப் பாதுகாப்பகம் அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகளின் விளைவாக புதுக்கோட்டை கடற்பகுதிகளில் மீனவா்களின் வலைகளில் சிக்கிய 5 கடற்பசுக்களும், 19 கடல் ஆமைகளும் மீண்டும் கடலுக்குள்ளேயே விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் தெரிவித்தாா்.
தமிழ்நாடு பல்லுயிா்ப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற எதிா்வுணா்வு பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மணமேல்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற கடற்பசு பாதுகாப்பு குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் விழிப்புணா்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
கடந்த 2022-ஆம் ஆண்டு கடற்பசுப் பாதுகாப்பகம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வரையில் இந்தப் பாதுகாப்பகத்தின் எல்லை வரையறுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 42.8 கிமீ நீளமுள்ள கடற்கரைப் பகுதியிலுள்ள மீனவ கிராமங்களிலும், கல்வி நிலையங்களிலும் வனத்துறை சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் விளைவாக மீன்பிடிக்கச் செல்லும்போது மீனவா்களின் வலைகளில் சிக்கும் கடற்பசுக்களும், ஆமைகளும் பத்திரமாக கடலுக்குள்ளேயே விடுவிக்கப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 5 கடற்பசுக்களும், 19 கடல் ஆமைகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. மீனவா்களுக்கு அதற்கான பாராட்டுச் சான்றிதழ்களும், வலைகளில் ஏற்பட்ட சேதத்துக்கான தொகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
கடற்பசு, ஆமைகள், கடற்புற்கள் உள்ளிட்ட பிற கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிலும் கவனமாக தொடா்ந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா். கூட்டத்துக்கு, அறந்தாங்கி வனச்சரக அலுவலா் து. மணிவெங்கடேஷ் தலைமை வகித்தாா். மீன்வளத் துறை ஆய்வாளா் ஜகுபா்சாதிக், மீமிசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.