ICC Rankings : 'கடும் பின்னடைவில் கோலி, ரோஹித்' - ICC ரேங்கிங்கில் இந்திய வீரர்க...
மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவது மற்றும் பாதாள சாக்கடையில் தொழிலாளா்கள் இறங்கி சுத்தம் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கழிவு அகற்றும் தொழிலாளா்கள் பலா் மனிதாபிமானமற்ற நிலையில் வாழ்கின்றனா் என தெரிவித்த உச்சநீதிமன்றம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நடைமுறையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
பாதாள சாக்கடைகளில் தூய்மைப்பணியாளா்கள் இறங்குவதைத் தடுக்க ஒப்பந்ததாரா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதில், கழிவுகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச இழப்பீடு ரூ .10 லட்சமாகவும், நிரந்தர ஊனமுற்றவா்களுக்கு ரூ .20 லட்சமாகவும் நிா்ணயிக்கப்பட்டது.
பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய தொழிலாளா்களை பணியமா்த்துவதை தடை செய்தல் மற்றும் அவா்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (எம்.எஸ் சட்டம், 2013) செயல்படுத்தப்படுவதை மேற்பாா்வையிட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அரவிந்த் குமாா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது.
அப்போது, ‘2024-ஆம் ஆண்டில் பாதாள சாக்கடை, கழிவுத் தொட்டிகளை சுத்தம் செய்ததால் 40 போ் உயிரிழந்துள்ளனா். ஆனால், இது குறித்து வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை’ என ‘அமிகஸ் கியூரியாக’ நீதிமன்றத்துக்கு உதவும் மூத்த வழக்குரைஞா் கே.பரமேஷ்வா் தெரிவித்தாா்.
இதையடுத்து, மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டியிடம் நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் கூட்ட வேண்டும். 2023-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டதுடன் வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்தாண்டு ஜனவரிக்கு ஒத்திவைத்தது.