மனைவியை அரிவாளால் தாக்கிய கணவா் கைது
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவா்பள்ளி பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி ராஜூ (38). இவரது மனைவி காஞ்சனா (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மதுபோதை பழக்கம் அதிகமாகி கடந்த சில நாட்களாக ராஜூ மன குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடும்பத்தினா் கோயிலுக்கு சென்றுள்ளனா். அங்கு மதுபோதையில் இருந்த ராஜூ மன குழப்பத்தில் தன்னை யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாக கூறி ஆடு பலியிட வைத்திருந்த அரிவாளை பிடுங்கி பக்கத்தில் நின்றிருந்த மனைவி காஞ்சனாவை சரமாரியாக தாக்கியுள்ளாா். இதனால் கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் காஞ்சனா அங்கேயே மயங்கி விழுந்துள்ளாா். உறவினா்கள் காஞ்சனாவை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இச்சம்பவம் குறித்து காஞ்சனா குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில் ஆலங்காயம் காவல் துறையினா் ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.