இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்குதான் எனது ஆதரவு! -மில்லர்
மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து, தற்கொலை நாடகமாடிய கணவன்... விருதுநகர் அருகே நடந்த கொடூரம்
வெம்பக்கோட்டை அருகே கணவன் மனைவி இடையேயான குடும்ப சண்டையில் மனைவியை கொன்று உடலை தீ வைத்து எரித்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 38) இவரின் மனைவி முனீஸ்வரி(32). கணவன்-மனைவி இருவரும் அருகே உள்ள பட்டாசு கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். பொன்னுசாமி- முனீஸ்வரி தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவில் கோவிலுக்கு சென்ற தம்பதியினர் நடு இரவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக அதிகாலையிலும் சண்டை ஏற்படவும் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி, மனைவி என்றும் பாராமல் கீழே கிடந்த சிறிய உரல் கல்லை எடுத்து முனீஸ்வரியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த முனீஸ்வரியை சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொலையை மறைப்பதற்காகவும், முனீஸ்வரி தற்கொலை செய்ததுபோல சித்தரிப்பதற்காகவும் தனது டூவீலரின் பெட்ரோல் டியூப் மூலமாக வாட்டர்கேனில் பெட்ரோல் பிடித்து முனீஸ்வரியின் உடல் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். ஆனால், சடலம் முழுவதும் பற்றி எரியாமல் அரைகுறையாக எரிந்து கருகியுள்ளது.
இதற்கிடையே விஷயமறிந்து வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினரிடம், கணவன்-மனைவி சண்டையில், முனீஸ்வரி தற்கொலை செய்யும் முயற்சியில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார். நான் அதை தடுக்க முயற்சித்தும் பலனின்றி உயிரிழந்துவிட்டார் என பொன்னுசாமி கதை கட்டியுள்ளார்.
முனீஸ்வரியின் சந்தேக மரணம் தொடர்பான தகவல் வெம்பக்கோட்டை போலீஸூக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது பொன்னுசாமியின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் இருந்த காயங்கள் இருப்பதை போலீஸார் கவனித்தனர். இதுகுறித்து போலீஸார் கேட்டதற்கு, 'இரவிலும் அதன்தொடர்ச்சியாக காலையிலும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் உண்டான காயம் என கூறியிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், முனீஸ்வரியை கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், பொன்னுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.