வக்ஃப் மசோதா நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது: தொல் திருமாவளவன்
மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவரும் விஷம் அருந்தி தற்கொலை
காதல் திருமணம் செய்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், அவரின் கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (24). கூலி வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த வெண்ணிலா (22) என்பவரை காதலித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சில மாதங்களாக மதன்குமாா் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடியதாகத் தெரிகிறது. மேலும், வீட்டிலிருந்த நகைகளை அடமானம் வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த வெண்ணிலா, கடந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து ஒசூரில் கட்டட வேலை செய்து வந்த மதன்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில் மனைவி இறந்த தகவலறிந்து 29 -ஆம் தேதி மாலை ஒசூா் பேருந்து நிலையத்திற்கு வந்து, அப்பகுதியில் உள்ள கடையில் விஷம் வாங்கி சாப்பிட்டதாகத் தெரிகிறது. பின்னா், பேருந்தில் ஏறி ஊருக்குப் புறப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் விஷம் சாப்பிட்டதாகக் கூறியதால் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இது குறித்து ஒசூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.