மீண்டும் மீண்டும்..! கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் திடீரென விழுந்த கான்கிரீட் - ஆடி கார் சேதம்!
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக கோவையில் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்படும் பாலங்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகின்றன. மற்ற மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பிறகு சர்ச்சையில் சிக்கின.

ஆனால் இந்த மேம்பாலம் கட்டும்போதே ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் ஹோப்ஸ் காலேஜ் அருகே ஒரு கார் சென்று கொண்டிருக்கும்போதே, மேம்பாலத்தில் இருந்து திடீரென கான்கிரீட் கலவை பெயர்ந்து விழுந்தது.
அதில் காரின் முன் பகுதி கண்ணாடி உடைந்து பலத்த சேதமடைந்தது. இது கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழித்தடத்தை தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். “எனவே பணிகளை மிகுந்த முன் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் மேத்தீவ் செரியன் தன்னுடைய ஆடி சொகுசு காரில் நேற்று காலை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். ஃபன் மால் அருகே வரும்போது மேம்பாலத்தில் இருந்து கான்கிரீட் பெயர்ந்து அவரின் கார் மீது விழுந்து முன் பகுதி கண்ணாடி உடைந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு சம்பவங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து மருத்துவர் மேத்தீவ் செரியன் கூறுகையில், “இதனால் என்னுடைய காரில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. பணத்துக்காக இதை கேள்வி எழுப்பவில்லை. இதுவே இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்.

இது முதல்முறை நிகழ்ந்த சம்பவம் அல்ல. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்.” என்று கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.