வாட்ஸ்அப்க்கு வந்த இன்ஸ்டா லிங்க் - ரூ.150க்கு ஆசைப்பட்டு ரூ.61 லட்சத்தை இழந்த மராத்தி நடிகர்!
நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த மோசடியில் பொதுமக்கள் தொடர்ந்து கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அந்த பட்டியலில் மராத்தி நடிகர் சாகர் கராண்டே என்பவரும் சேர்ந்துள்ளார்.
சாகர் கராண்டேயின் வாட்ஸ் ஆப் நம்பருக்கு மர்ம நம்பரில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதனை ஒரு பெண் அனுப்பி இருந்தார். அவர் சாகர் கராண்டேயிடம் தான் அனுப்பும் இன்ஸ்டாகிராம் லிங்க்கை திறந்து அதனை லைக் செய்தால் ரூ.150 கிடைக்கும் என்று தெரிவித்தார். லைக் பண்ணினால் 150 கிடைக்கிறதே என்று எண்ணி சாகர் கராண்டேயும் அப்பெண் அனுப்பிய இன்ஸ்டாகிராம் வீடியோவை பார்த்து லைக் பண்ணினார்.
அதனால் அவருக்கு பணமும் கிடைத்தது. அதன் மூலம் சாகர் கராண்டேயிடம் நம்பிக்கையை ஏற்படுத்திய அப்பெண் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்.

அதனை நம்பி சாகர் கராண்டே ரூ.27 லட்சத்தை முதலீடு செய்தார். அந்த பணத்திற்கு அதிக லாபம் கிடைத்திருப்பது போன்று ஸ்கிரீனில் காட்டினர். அந்த பணத்தை சாகர் கராண்டே எடுக்க பார்த்தார். ஆனால் அவரால் எடுக்க முடியவில்லை. முழுமையான டாஸ்க்கை முடித்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்று அப்பெண் தெரிவித்தார். அதோடு 80 சதவீத டாஸ்க் முடிந்திருப்பதாகவும், எஞ்சிய டாஸ்க்கை முடிக்க மேலும் ரூ.19 லட்சம் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதனையும் சாகர் கராண்டே செய்தார்.
அதன் பிறகு பணத்தை எடுக்க முயன்றபோது 30 சதவீதம் வரி செலுத்தவேண்டும் என்று கூறினர். அவர்கள் கேட்ட படி 30 சதவீத வரியையும் செலுத்தினார்.
மொத்தம் 61 லட்சத்தை செலுத்திவிட்டார். அப்படி இருந்தும் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இது குறித்து அப்பெண்ணிடம் கேட்டபோது 30 சதவீத வரி தொகையை தவறான வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டதாகவும், எனவே மேற்கொண்டு பணம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன் பிறகே சந்தேகப்பட்டு இது குறித்து சாகர் கராண்டே சைபர் பிரிவில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாகர் கராண்டே மராத்தி படங்களில் அதிக அளவில் நடித்திருக்கிறார். காமெடி ஷோவிலும் நடித்திருக்கிறார்.
பங்குச்சந்தை மோசடியில் ரூ.51 லட்சம் இழந்த குடும்ப பெண்
மும்பையில் பங்குச்சந்தை மோசடியும் அதிக அளவில் நடக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 13-ம் தேதி மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் குடும்ப பெண் ஒருவருக்கு அவரது வாட்ஸ் ஆப் நம்பரில் பங்கு வர்த்தகம் தொடர்பாக ஒரு மெசேஜ் வந்தது. உடனே அந்த மெசேஜில் இருந்த நம்பருக்கு குடும்ப பெண் தொடர்பு கொண்டார். ஆகாஷ் என்பவர் தாங்கள் நிஷா பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தங்களது மொபைல் ஆப் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் பார்க்க முடியும் என்று அப்பெண்ணிடம் கூறினர்.
அதோடு அப்பெண்ணை ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் சேர்த்துவிட்டு அவருக்கு ஒரு மொபைல் ஆப் லிங்க் அனுப்பினர். அப்பெண்ணும் அந்த மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் தனது பெயரை பதிவு செய்து கொண்டு முதலில் ரூ.20 ஆயிரத்தை முதலீடு செய்தார்.

அந்த பணத்திற்கு வர்த்தகம் செய்தபோது அதிக லாபம் இருப்பதாக காட்டியது. இதனால் அப்பெண் தொடர்ச்சியாக பணத்தை முதலீடு செய்துகொண்டே இருந்தார். அவருக்கு ஐ.பி.ஒவில் பங்கு கிடைத்திருப்பதாகவும், இதற்காக 33.73 லட்சம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர். அப்பெண் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து கடன் வாங்கி கொடுக்கும்படி கேட்டனர். அப்பெண்ணும் கடன் வாங்கி முதலீடு செய்தார். அப்பெண் அதன் பிறகு மேலும் 21 லட்சம் முதலீடு செய்தார். வாங்கிய கடனை அடைக்க அவர் பணத்தை எடுக்க முடிவு செய்தார். ஆனால் பணத்தை எடுக்க 15 சதவீதம் கமிஷன் தொகை செலுத்தவேண்டும் என்று கூறினர். அப்பெண் அவர்கள் கேட்ட பணத்தை செலுத்தினார்.
ஆனாலும் பணத்தை எடுப்பதில் சிரமம் இருந்தது. அவசரமாக பணம் எடுக்கவேண்டும் என்று சொன்னார். உடனே பணம் எடுக்கவேண்டும் என்றால் கூடுதலாக 4 லட்சம் செலுத்த வேண்டும் என்று கேட்டனர். அதனையும் அப்பெண் செலுத்தினார். அப்படி இருந்தும் அப்பெண்ணால் பணத்தை எடுக்க முடியவில்லை. அதன் பிறகுதான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை உணர்ந்து இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.