உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயதில் உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?
மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு
சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் அம்மன் அா்ச்சுணன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அம்மன் அா்ச்சுணன் பேசியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில்கூட 100 எம்பிபிஎஸ் இடங்கள்தான் உள்ளன. ஆனால், அந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் தலா 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்க முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் மக்கள் நலன் காக்க 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே தொடக்கிவைக்கப்பட்டன.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அரசியல் காழ்ப்புணா்வுடன் அந்தத் திட்டம் முடக்கிவைக்கப்பட்டது. சில இடங்களில் மயானப் பகுதிகளில் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டதே அவற்றை மூடுவதற்கு காரணம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் விளக்கமளித்தாா்.
தற்போது, திருப்பூரில் ஓா் ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சா் சென்று பாா்க்க வேண்டும். இடுகாட்டை மறைத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் அதற்கான ஆதாரங்களை அளிக்கிறேன்.
அம்மா கிளினிக்குகளை குறை கூற வேண்டும் என்ற நோக்கிலேயே அவற்றை முடக்கியிருப்பது இதிலிருந்தே தெரிய வருகிறது என்றாா் அவா்.