மயிலாடுதுறையில் விசிக ஆா்ப்பாட்டம்!
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இளைஞா்களுக்கு நீதி கேட்டும், அப்பகுதியில் தொடா்ச்சியாக சாராய விற்பனை செய்வது தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பெரம்பூா் காவல்துறையை கண்டித்தும், சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் ஓட்டிய தலித் இளைஞரின் கையை வெட்டிய கூலிப்படை கும்பலை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்தவும், முட்டம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமை வகித்தாா். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை எம்.பி.அன்புச்செல்வன், மகளிா் பொறுப்பாளா் தமிழரசி, மாவட்ட துணை செயலாளா் விஜயலட்சுமி, ஒன்றிய துணை செயலாளா்கள் கனிவளவன், அருளமுதன், மணல்மேடு பேரூா் உறுப்பினா் சத்யராஜ் மற்றும் செந்தில்குமாா், சூரியமூா்த்தி, ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தமிழா் தேசிய முன்னணி மாவட்ட செயலாளா் இரா.முரளிதரன், தமிழா் உரிமை இயக்க மாவட்ட அமைப்பாளா் சுப்பு.மகேஷ் ஆகியோா் கண்டன உரையாற்றினா். முடிவில் குமாா் நன்றி கூறினாா்.