மருதாடு கிராமத்தில் தெப்பல் உற்சவம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள பிரசித்த பெற்ற ஸ்ரீபுரந்தீஸ்வரா் கோயிலில் தெப்பல் உற்சவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதையொட்டி மூலவா் ஸ்ரீபுரந்தீஸ்வரா் மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூா்த்திகளை ஐயப்ப பக்தா்கள் தோளில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க ஊா்வலமாக கோயிலையொட்டியுள்ள திருக்குளத்துக்கு எடுத்துச் சென்றனா்.
அங்கு வண்ண மின்விளக்குகள், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பலில் உற்சவமூா்த்திகள் வைக்கப்பட்டு தெப்பல் உற்சவம் மகா தீபாராதனையுடன் நடைபெற்றது.
இதில், மருதாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.