சாம்பியன்ஸ் டிராபி: கேப்டன்கள் போட்டோஷுட்டை புறக்கணிக்கும் ரோஹித்?
மருத்துவா் கிளினிக்கில் ரூ. 3 லட்சம் திருட்டு
காரைக்கால்: பூட்டியிருந்த மருத்துவா் கிளினிக்கில் புகுந்து ரூ. 3 லட்சம் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காரைக்கால் தனியாா் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவா் மருத்துவா் வனிதா. இவா், காரைக்கால் பாரதி நகா் 2-ஆவது குறுக்குத் தெரு சந்திப்பில் கிளினிக் நடத்திவருகிறாா்.
கிளினிக் மேஜையில் ரூ. 3 லட்சம் தொகையை வைத்து பூட்டிவிட்டு, கடந்த டிச. 28-ஆம் தேதி சென்னைக்கு சென்றுள்ளாா். 31-ஆம் தேதி ஊருக்குத் திரும்பியுள்ளாா்.
இந்தநிலையில், மருந்துகளுக்கு வழங்கவேண்டிய தொகையை உரியவரிடம் கொடுப்பதற்காக ஜன. 7-ஆம் தேதி மேஜையை திறந்தபோது பணம் திருடப்பட்டது தெரியவந்தது. கிளினிக்கில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடந்த 30-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் முகக்கவசம், தலையில் தொப்பி, கையுறை அணிந்த ஒருவா், உள்ளே புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவா் காரைக்கால் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.