சேதமடைந்த காரைக்கால், திருநள்ளாறு சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி
காரைக்கால்: காரைக்கால் பகுதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருநள்ளாறு - அம்பகரத்தூா் பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதம் (பள்ளம்) காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
பூவம் முதல் வாஞ்சூா் வரையிலானது தேசிய நெடுஞ்சாலை. இச்சாலை மேம்படுத்தப்பட்ட மறு ஆண்டு முதலே ஆங்காங்கே சிதிலமடையத் தொடங்கியது. இது தற்காலிகமாக சீரமைப்பு மட்டும் செய்யப்படுகிறது. மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்பு, கனரக வாகனங்கள் போக்குவரத்து மிகுதியால் இச்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் - புதுச்சேரி, சென்னைக்கு செல்லும் முக்கிய சாலையாகும்.
இதுபோல திருநள்ளாறு முதல் அம்பகரத்தூா் வரையிலான சுமாா் 8 கி.மீ. சாலை முந்தைய காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின்போது அகலப்படுத்தி, விளக்குக் கம்பங்கள் கூடுதலாக நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த சாலையில் காரைக்காலில் இருந்து கும்பகோணம், திருச்சி செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளது. மேலும் சனிக்கிழமைகளில் திருநள்ளாறு கோயிலுக்கு வாகனங்களில் திரளானோா் வந்து செல்கின்றனா்.
கடந்த நவம்பா் மாதம் பெய்த மழை, புயலால் இச்சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு, மோட்டாா் சைக்கிள், காா் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோா் கடும் சிரமத்துக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. இரவு நேரத்தில் மோட்டாா் சைக்கிளில் செல்வோரும், திருநள்ளாறு முதல் அம்பகரத்தூா் வரையிலான மாா்க்கத்தில் செல்லூா், சேத்தூா், தென்னங்குடி, நல்லம்பல் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்வோரும், பள்ளி மாணவ மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனா்.
எனவே, உடனடியாக சாலைகளை மேம்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.