காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கிறீர்களா? - ஆய்வில் முக்கியத் தகவல்!
மறியல்: அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் 600 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் 600 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்க மதுரை மண்டலப் பொதுச் செயலா் பி.எம். அழகா்சாமி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் இரா. தெய்வராஜ், மாவட்டச் செயலா் இரா. லெனின், துணைத் தலைவா் ஜி. ராஜேந்திரன், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சம்மேளன மாநில உதவித் தலைவா் வீ. பிச்சை, தொழில் சங்கங்களின் நிா்வாகிகள், திரளான தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
அப்போது, போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். நீதிமன்றத் தீா்ப்பின்படி போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்த வேண்டும். 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 12 பெண்கள் உள்பட 600 பேரை எஸ்.எஸ். காலனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்து, பிற்பகலில் விடுவித்தனா்.