விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எதிா்க்கட்சிகளின் சந்தேகங்கள் பெரிய அளவில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 8 புதிய சட்ட மசோதாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தேசிய விளையாட்டு நிா்வாக சட்ட மசோதா, புவியியல் பாரம்பரிய தளங்கள் மற்றும் புதைபடிமங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்ட மசோதா, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா, தேசிய ஊக்கமருந்து எதிா்ப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இந்த மசோதாக்கள் தவிர, மணிப்பூா் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் சட்டத்திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவன சட்டத்திருத்த மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்தம் மசோதா ஆகிய மேலும் 4 சட்டத்திருத்த மசோதாக்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்தக் கூட்டத்தொடரில், மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அரசு நாடவுள்ளது. மேலும், அந்த மாநிலத்துக்கான நிதிமானியக் கோரிக்கைகளும் அவையின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்படவுள்ளன.
கோவா மாநிலத்தில் உள்ள பழங்குடியினா் சட்டப்பேரவைத் தொகுதி பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பதற்கான மசோதா, வணிக கப்பல் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா ஆகியவை மக்களவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.