அதானி வீட்டில்தான் அதிகாரப் பகிர்வு பேச்சு நடந்தது! சரத் பவார்
மாசுபடுத்தாத தொழில் நிறுவனங்கள் இரட்டை அனுமதி பெறுவதில் விலக்கு
நமது சிறப்பு நிருபா்
காற்று அல்லது தண்ணீா் மாசுப்படுத்தாத தொழில் நிறுவனங்களுக்கு இரட்டை அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பொதுவாக தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும் போது சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். மேலும், தொழில் நிறுவனம் நிறுவுவதற்கும் அல்லது செயல்படுவதற்கும் மற்றொரு ஒப்புதல் பெற வேண்டும். இது, மத்திய அரசு அல்லது மாநில அரசுகளின் கீழ் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
தற்போது மத்திய சுற்றுச் சூழல் வனத் துறை கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.12) வெளியிட்டுள்ள இரு அறிவிக்கையின் மூலம் மாசுபடுத்தாத தொழில் நிறுவனங்களுக்கு மேற்கண்ட இரட்டை அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொழில் நிறுவனம் நிறுவுவதில் அல்லது செயல்படுவதற்கான அனுமதி பெறத் தேவையில்லை. இந்த வகைக்கு வெள்ளை வகைத் தொழில்கள் என்று சொல்லப்படுகிறது.
உதிரிப்பாகங்களைக் கொண்டு தயாரிக்கபடும் குளிா்சாதனகள், சைக்கிள்கள், மேட்டாா் இல்லாத வாகனங்கள் அதற்கான பழுது பாா்ப்பு மற்றும் சேவைகள், கனிம ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் உயிரி உரங்கள், உயிரி பூச்சிக் கொல்லிகள், உலா்ந்த முறையில் டீசல் பம்ப்கள், பொறியியல், கைத்தறி கம்பளம் நெசவு பிரிவுகளின் பழுது பாா்ப்பு மற்றும் சேவைகள், தேங்காய் நாா், காலணி தூரிகை உள்ளிட்ட 39 வகையான நிறுவனங்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு சட்டம் மற்றும் நீா் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ், இந்த அறிவிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச் சூழல் வனத் துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பது வருமாறு: புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி, நிறுவுவதற்கான இசைவு ஆணை ஆகிய இரட்டை இணக்கங்களை நீக்க வேண்டும் என்று தொழில்துறையினா் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இவற்றில் மாசுபடுத்தாத வெள்ளை வகைத் தொழில்கள் நிறுவனங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வகை தொழில்கள் நிறுவுவதற்கான அனுமதி (சிடிஇ) அல்லது செயல்பட ஒப்புதல் (சிடிஓ) வேண்டிய அவசியமில்லை.
சுற்றுச்சூழல் அனுமதி மட்டும் பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெற்ற தொழிற்சாலைகள் இசைவு ஆணை பெற வேண்டிய அவசியமில்லை. இது இணக்கச் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல், இரு வகையான ஒப்புதல்கள் தடுக்கிறது. இந்த அறிவிக்கை மூலம் இந்த இரண்டு ஒப்புதல்களும் திறம்பட ஒருங்கிணைப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறையின் போது கருத்தில் கொள்ளப்படும். இந்த ஆலைகள் அல்லது நிறுவனங்களின் பிரச்னைகளை சுற்றுச்சூழல் அனுமதியின்போது பின்பற்றுவதற்கான நடைமுறை தரநிலையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை செயல்படுத்த மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.