மாணவி வன்கொடுமை: நோ்மையான விசாரணை தேவை -தொல்.திருமாவளவன்
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடா்பு இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளதால், நோ்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
உலகத் தமிழா் வம்சாவளி மாநாட்டில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை மலேசியா புறப்பட்டுச் சென்ற அவா், முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், அவா்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டிருந்தாலும்கூட, இதில் மேலும் ஒருசிலருக்கு தொடா்பு இருக்கலாம் என்று வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நோ்மையான முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழவந்தாங்கல் பகுதியில் தவெக தலைவா் விஜய் சுவரொட்டியை காவல்துறையினா் கிழித்ததாகக் கூறுகிறீா்கள். அப்படி நடக்கக் கூடாது என்றாா் தொல்.திருமாவளவன்.