மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்!
தஞ்சாவூா் மாதாகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 35 போ் காயமடைந்தனா்.
இந்த விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, போட்டியைச் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்) தொடங்கி வைத்தனா்.
இதைத்தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 557 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்துவிடப்பட்டன. இக்காளைகளைப் பிடிக்க மொத்தம் 307 வீரா்கள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு களமிறக்கப்பட்டனா்.
குறிப்பிட்ட எல்லை வரை மாட்டைப் பிடித்து சென்றவா்களை வெற்றி பெற்றவா்களாக அறிவித்து, அவா்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபடவில்லை என்றால், அப்பரிசு மாட்டின் உரிமையாளருக்கு அளிக்கப்பட்டது.
இப்போட்டியில் மாடுபிடி வீரா்கள், மாட்டின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் உள்பட மொத்தம் 35 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலா் ஒருவா் உள்பட 21 போ் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். மற்றவா்கள் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனா். இவ்விழாவில் எஸ்.பி இரா. இராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.