கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
மாதாந்திர நிதியுதவி: 8 லட்சம் பெண்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கிய மகாராஷ்டிரா அரசு!
மகாராஷ்டிராவில் 65 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் முக்கிய மந்திரி லட்ஹி பெஹின் யோஜனா திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு மாநிலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. பல திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக இத்திட்டம் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டது. அந்நேரம் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களின் ஆவணங்களை சரிபார்க்காமல் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது தேர்தலில் வெற்றி வெற்றுவிட்டதையடுத்து பா.ஜ.க கூட்டணி அரசு தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் மாதாந்திர நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக பெண்கள் கொடுத்து இருக்கும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதோடு அங்கன்வாடி ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா அரசு ஏற்கனவே நமோ சேத்கரி மகாசம்னான் நிதி என்ற திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது. இத்திட்டத்தில் நிதியுதவி பெறும் பெண்களும் முக்கிய மந்திரி லட்ஹி பெஹின் யோஜனா திட்டத்தில் ரூ.1500 பெற்று வந்தனர். அவ்வாறு இரண்டு திட்டத்தில் நிதியுதவி பெறும் 8 லட்சம் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கில் லட்ஹி பெஹின் யோஜனா திட்டத்தில் 500 ரூபாய் மட்டும் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்திற்கு இதுவரை மொத்தம் 2.63 கோடி பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் அதில் 11 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இப்போது மேலும் 8 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முழுமையான ஆய்வுக்கு பிறகு 15 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்திருந்தார். இது தொடர்பாக பட்னாவிஸ் கூறுகையில்,'' இத்திட்டத்திற்கான விதிமுறைகளில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை. திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதில் பயனடைய சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில்தான் இப்போது செயல்பட்டு வருகிறோம்''என்று தெரிவித்தார். இத்திட்டத்தில் பயனடைய ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் மற்றும் மகாராஷ்டிரா குடியுரிமை சான்றிதழ் போன்றவை இருக்க வேண்டும். 4 சக்கர வாகனம், குடும்பத்தில் ஒருவர் அரசு வேலையில் இருந்தாலும் அக்குடும்பத்தில் யாரும் விண்ணப்பிக்க முடியாது. மாநில அரசு ஏற்கனவே இத்திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்படும் நிதியில் 10 ஆயிரம் கோடியை குறைத்துவிட்டது. தற்போது இத்திட்டத்தில் 2.46 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.