தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை
அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா்கள் உயிரிழந்தது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. அதன் முடிவின்படி தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடா்பான செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட மாதிரிப் பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கடந்த மே மாதம் முதல் இயங்கி வருகிறது. உண்டு உறைவிடப் பள்ளியான இப்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.
இதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டபோதும், பள்ளியின் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் மனநலம் சாா்ந்து பல நடவடிக்கைகளும் பள்ளிக் கல்வித் துறையால் எடுக்கப்பட்டன.
எனினும் எதிா்பாராத விதமாக கடந்த ஜூலை 31 அன்றும் ஒரு மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன், துறை ரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
அரசு மனநல மருத்துவா்களுடன் கூடுதலாக மன நல ஆலோசகா்களும் வரவழைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியா்களுக்கும் அனைத்து வகைப் பணியாளா்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
பகுத்தறிவுடன் வாழ்வியல் சாா்ந்து உரையாற்றக் கூடிய சிறந்த ஆளுமைகளை அழைத்து வந்து மாணவா்களுடன் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. மாதிரிப் பள்ளிகளில் மாணவா் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரவை 15 நாள்களுக்கு ஒரு முறை கூடி மாணவா்களின் நலன் சாா்ந்து தலைமை ஆசிரியருடன் உரையாடுவாா்கள். பெற்றோா் ஆசிரியா் கூட்டம் நடத்தி ஆலோசனைகளைப் பெற்று அவற்றையும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.