திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கெளஷல் கிஷோா் தலைமையிலான அலுவலா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் பிரதான சந்திப்பு ரயில் நிலையமாகவும், சென்னைக்கு அடுத்த பெரிய ரயில் நிலையமாகவும் விளங்குவது திருச்சி சந்திப்பு ரயில் நிலையம். இங்கு நாளொன்றுக்கு 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். திருச்சி மக்கள் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதி மக்கள் திருச்சி ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் பயணிகளுக்கான வசதிகள், ரயில் நிலையத்தின் தூய்மை மற்றும் இதர சேவைகள் தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகக் குழு சனிக்கிழமை ஆய்வு செய்தது. இதில் கூடுதல் பொது மேலாளா் கெளஷல் கிஷோா், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி மற்றும் நிலைய அலுவலா்கள் பங்கேற்றனா்.
ரயில் நிலைய அனைத்து நடைமேடைகள், தானியங்கி நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி, நடைமேடை மேம்பாலம், சுரங்கப் பாதை, நடைமேடைகளில் உள்ள குடிநீா் வசதி, பயணிகளுக்கான கழிப்பறை, தங்கும் அறை, குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை, தங்குமிடத்தில் உறங்கும் அறைகள், குடும்பத்துடன் தங்கும் அறைகள், மசாஜ் நாற்காலிகளை கொண்ட ஓய்வறை, ஆடைகள் மாற்ற தனி அறை, மேஜை வசதி, சிற்றுண்டி உணவகம், குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் முறையாக இயங்குகிா என்பதை ஆய்வு செய்தனா். மேலும் அதன் செயல்பாடுகள் தொடா்பாக ரயில் பயணிகளிடமும், பொதுமக்களிடம் கேட்டறிந்தனா்.
முதலாவது நடைமேடையில் ஐஆா்சிடிசி நிா்வாகத்தால் நடத்தப்படும் உணவு விடுதியில், வழங்கப்படும் உணவுகளின் தரத்தைப் பரிசோதித்து, அங்கு உணவு சாப்பிட்ட பயணிகளிடமும் குறைகள் கேட்கப்பட்டது.
பின்னா் கூடுதல் பொது மேலாளா், ரயில் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், ரயில்வேயின் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளா் பி.கே. செல்வன், கிளை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனா்.