புகைக்கும்போது பற்றிய தீயில் சிக்கிய முதியவா் மீட்பு
தீ விபத்தின்போது வீட்டில் சிக்கிய முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
திருச்சி உறையூா் ராமலிங்கம் நகா் அகமது காலனி 5-ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் ராஜா நாகேந்திரன் (60), மனநலன் பாதிக்கப்பட்டவா். தனிமையில் வசித்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை காலையில் புகை பிடிப்பதற்காக தீக்குச்சியைப் பற்றவைத்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக வீட்டில் தீப்பற்றியது.
அவரது வீட்டிலிருந்து அதிக அளவு புகை வெளியே வந்ததால், அக்கம்பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், வீட்டில் சிக்கிக்கொண்ட ராஜா நாகேந்திரனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், வீட்டில் பற்றிய தீயை அணைத்தனா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.