மாநகராட்சி பணியாளா்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையே 2024-25-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியன.
சென்னை கண்ணப்பா் திடலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கொடியேற்றி போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து போட்டிக்கான தீபத்தை ஏற்றி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மேயா் ஆா்.பிரியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தப் போட்டிகள் மாா்ச் 10 முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரை தினமும் சுமாா் ஒரு மணி நேரம் நடைபெறும். இதில், மாநகராட்சியில் பணிபுரியும் 1,756 ஆண்கள், 586 பெண்கள் மற்றும் 74 மாமன்ற உறுப்பினா்கள் என மொத்தம் 2,416 போ் பங்கேற்கவுள்ளனா்.
கேரம், சதுரங்கம், இறகுப் பந்து, நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, கண்ணப்பா் திடல், மந்தைவெளி அல்போன்சா விளையாட்டு திடல், முல்லை நகா் இறகுப் பந்து உள்விளையாட்டு, செனாய் நகா் கிரெசன்ட் விளையாட்டு திடல் ஆகியவற்றில் நடைபெறவுள்ளன என்று தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், துணை ஆணையா்கள் ம.பிரதிவிராஜ் (வருவாய் (ம) நிதி), கட்டா ரவி தேஜா (வடக்கு வட்டாரம்), நிலைக்குழுத் தலைவா்கள் பாலவாக்கம் த.விசுவநாதன் (கல்வி), கோ.சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.