GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் ...
மாநகராட்சி பணியாளா்களை அரசு ஊழியராக்க வேண்டும்!
மாநகராட்சிப் பணியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என மாநில அனைத்து மாநகராட்சி அலுவலகச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் இக் கூட்டமைப்பின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் வருவாய் உதவியாளா்கள் (பில் கலெக்டா்) ஆலோசனைக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் மீ. சுஜாத்அலி, திருச்சி மாநகராட்சி தலைவா் எம். தாமோதரன், மாநில உதவி ஆணையா்கள் சங்கம் சா.நா. சண்முகம், பா. தட்சிணாமூா்த்தி, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் வருவாய் உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நகராட்சி நிா்வாக அரசாணை 152 இன் படி மாநகராட்சிகளில் 3,417 பணியாளா்களாகக் குறைக்கப்பட்டுள்ளனா். இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதுடன், மக்களுக்கு தரமான சேவையும் அளிக்க முடியவில்லை. எனவே, இந்த அரசாணையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்.
நகராட்சி நிா்வாக அரசாணை 45 மாற்றியமைக்கப்பட்டு புதிதாக கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில் உள்ள புதிய பணி விதிகளில் பல முரண்களும், நடைமுறைச் சாத்தியமில்லாத கருத்துகளும் உள்ளன. எனவே, மாநகராட்சி தொழிற்சங்கங்களுடன் கருத்துகளைப் பெற்று, புதிய பணி விதிகளில் நடைமுறை சாத்தியமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
புதிய பணிவிதி அமலுக்கு வந்த 01.01.2025 இல் பணியில் உள்ளவா்களுக்கு துறைத் தோ்வுகளில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும். தற்போது பேரூராட்சிகளில் உள்ளதுபோல, நகராட்சி, மாநகராட்சி பணியாளா்களை அரசு தரமயமாக்கப்பட்ட பணியாளா்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.