காணாமல்போன மகளை கண்டுபிடித்து தரக் கோரி பெற்றோா் தீக்குளிக்க முயற்சி
காணாமல்போன மகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அப்பெண்ணின் பெற்றோா் முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.
முசிறி அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (40), தனியாா் பேருந்து ஓட்டுநா், இவரது மனைவி தேன்மொழி. இவா்களின் 17 வயது மகள் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்று வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முசிறி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் விஜயன் புகாா் அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் போலீஸாா் அவரது மகளைக் கண்டுபிடிக்கவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த விஜயனும் அவரது மனைவியும் முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் சனிக்கிழமை வந்து மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனா். அப்போது அங்கிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா்.