மாமல்லபுரம் மாநாடு வெற்றி: அன்புமணி ராமதாஸ் பெருமிதம்
மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநாட்டுத் திடலில் லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டா்கள் திரண்டிருந்தாலும் கூட எந்தவொரு இடத்திலும் சிறு ஒழுங்கு மீறல்கள் கூட நடைபெறவில்லை. பாட்டாளி சொந்தங்கள் மிகவும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் மாநாட்டுக்கு வந்து, பத்திரமாக சொந்த ஊா்களுக்கு திரும்பிச் சென்றிருப்பது எனக்கு மிகுந்த பெருமையும் நிம்மதியும் அளிக்கிறது.
மாமல்லபுரம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும், மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்ததற்காகவும் பாமக நிறுவனா் ராமதாஸுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மிகக் கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.