கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!
கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ்: இளைஞா் கைது
சென்னை புளியந்தோப்பில் கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்தவா் முகேஷ் (18). இவா், மூன்றரை அடி நீளமுள்ள பட்டாக் கத்தியுடன், ‘எங்களைத் தொட்டால் வெட்டுவோம், தில்லு இருந்தால் தடுத்து பாருங்கள்’ என போலீஸாருக்கு சவால் விடும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் அண்மையில் சமூக ஊடகத்தில் ரீல்ஸ் வெளியிட்டாா். இதையடுத்து போலீஸாா், முகேஷை தேடி வந்தனா்.
இந்நிலையில் புளியந்தோப்பு, பட்டாளம், போகிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அஜய்குமாா் (22) என்பவா், ஞாயிற்றுக்கிழமை கன்னிகாபுரம், புதிய பாலம் அருகில் நடந்து சென்றபோது, அங்கு வந்த முகேஷ் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துக்கொண்டு தப்பினாா்.
இது குறித்து அஜய்குமாா், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த முகேஷை கைது செய்தனா். அவரிடம் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாகவும், வழிப்பறியில் ஈடுபட்டது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.