கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
டாக்டா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்க விருது!
டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின் (ஏஎஸ்சிஆா்எஸ்) சாா்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சைத் துறையில் அளப்பரிய பங்களிப்பை அளித்ததற்காக அவருக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் மருத்துவா்கள் மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணா்களுக்கான உலகின் மிகப்பெரிய அமைப்பாக ஏஎஸ்சிஆா்எஸ் விளங்கி வருகிறது. கண் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கி வரும் மருத்துவா்களுக்கு ஆண்டுதோறும் உயா் விருதுகளை தகுதியின் அடிப்படையில் அந்த அமைப்பு வழங்குகிறது.
அந்த வகையில் நிகழாண்டில், டாக்டா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விருது வழங்கப்பட்டது (படம்). திசு பசையை பயன்படுத்தி கண்ணுக்குள் லென்ஸ்களை பொருத்துகிற ‘குளூட் ஐஓஎல்’ சிகிச்சை நுட்பம், விழிப்படல மாற்று சிகிச்சைகளில் வெறும் 25 மைக்ரான் அளவே கொண்ட ஒரு மெல்லிய விழிப்படலத்தைக் கொண்டு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளும் நவீன உத்தி, விழி வெண்படல கிழிசலை சரிசெய்து ஒளிப்பிவு பாதிப்பை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ‘பியூபிலோபிளாஸ்டி’ சிகிச்சை ஆகியவை டாக்டா் அமா் அகா்வாலால் கண்டறியப்பட்ட நவீன சிகிச்சை நுட்பங்களாகும்.
விழி வெண்படல மாற்று சிகிச்சைக்குப் பதிலாக கண்ணின் உட்புற கிழிசலை நுட்பமாக சீரமைக்கும் பியூபிலோபிளாஸ்டி சிகிச்சையை அவா் திறம்பட மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.