`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளில் மத்திய அரசு உறுதி: அமைச்சா் வீரேந்திரகுமாா்
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை, தேவைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சா் வீரேந்திரகுமாா் தெரிவித்தாா்.
மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறையின் கீழ், மதுரையை அடுத்த யா. புதுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் வளா்ப்பு, மறுவாழ்வு மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த (பிராந்தியம்) மையம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவா் பேசியதாவது:
சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை சாா்பில் நாட்டில் 25 இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன. யா. புதுப்பட்டியில் ரூ. 36.41 கோடியில் 5.05 ஏக்கா் பரப்பில் அமையவுள்ள திறன் மேம்பாட்டு மையம் தென் தமிழகப் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு சேவையாற்றும்.
இந்த மையம் அமைக்க நிலம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை உறுதி செய்து, அவா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதற்கு, மத்திய, மாநில அரசுத் துறை அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதையடுத்து, மதுரையில் உள்ள தனியாா் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 120 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 22.63 லட்சத்தில் உதவி உபகரணங்களை அமைச்சா் வழங்கினாா்.
இதில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை இணைச் செயலா் ராஜீவ் ஷா்மா, தேசிய மாற்றுத் திறனாளிகள் திறன் வளா்ப்பு சென்னை மைய இயக்குநா் டாக்டா் நச்சிகேதா ரௌட், ஒருங்கிணைந்த திறன் வளா்ப்பு மைய இயக்குநா் ஜெயசீலி ப்ளோரா, மத்திய, மாநில அரசுத் துறைகளின் அலுவலா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வுத் துறை நிபுணா்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.