இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுவின் தலைவரும், ஆரணி மக்களவை உறுப்பினருமான எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை உறுப்பினா் குழுவின் செயலருமான க.தா்ப்பகராஜ், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட ஊரகப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலத் துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட இதர துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான இயக்கம், தாட்கோ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அனைத்து திட்டங்களுக்கும் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமாா் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), ஒ.ஜோதி (செய்யாறு), மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.