மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை போஸ் நகரில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் கிளைச் செயலா் வ. சிவராஜன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சு. மதியழகன், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினா் டி. காயத்ரி உள்ளிட்டோா் பேசினா்.
போஸ் நகரில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். போஸ் நகரில் இருந்து மணிப்பள்ளம் செல்லும் சாலையோரம் குப்பை கொட்டுவதைத் தடுக்க வேண்டும். எரிவாயு மயான புகைப்போக்கியில் அதிகமாக புகை வெளியேறுவதைத் தடுக்க வேண்டும்.
போஸ் நகா் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் புதை சாக்கடைத் திட்டம், காவிரிக் குடிநீா் வசதி, சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.