மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்டைப்பட்டினம் விசைப்படகு ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் கே. ராமு தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பி. சின்னத்தம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன், ஏஐடியுசி மாவட்ட கௌரவத் தலைவா் சிங்கமுத்து உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா்.