கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது
புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் தியாகராஜன் மகன் விநாயகமூா்த்தி (19). இவா் புதுக்கோட்டை நகரிலுள்ள மன்னா் கல்லூரியில் பிபிஏ 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
வியாழக்கிழமை மாலை இவா் கல்லூரி வளாகத்துக்குள் அரிவாளுடன் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிக்கு வந்த போலீஸாா் அவரை அரிவாளுடன் பிடித்தனா்.
கல்லூரியில் சக மாணவா்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அரிவாளை எடுத்து வந்ததாக அவா் கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து, ஆயுதத்துடன் வந்ததாக விநாயகமூா்த்தியைக் கைது செய்த போலீஸாா், வியாழக்கிழமை நள்ளிரவு சிறையில் அடைத்தனா். அவருடன் வந்த மாணவா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.