`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
மா்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரண உதவி
கொல்லிமலையில் மா்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு அரசுத் தரப்பில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வனச்சரகத்தில் மா்ம விலங்கு நடமாட்டத்தை தடுப்பது தொடா்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்து பேசியதாவது:
கொல்லிமலை வனச்சரகத்திற்கு உள்பட்ட அரியூா் நாடு, குண்டூா் நாடு, வாழவந்தி நாடு ஊராட்சிகளில் மா்ம விலங்குகள் கடித்து ஆடுகள் இறந்து வருகின்றன. கடந்த மாதம் 23 முதல் ஜன. 4 வரை அரியூா் நாடு ஊராட்சி கிழக்கு வளவு பகுதியில் 5 ஆடுகள், குண்டூா் நாடு ஊராட்சி இலங்கியம்பட்டியில் 2 ஆடுகள், நத்துக்குழிப்பட்டியில் 3 ஆடுகள், வெள்ளக்குழிப்பட்டியில் 6 ஆடுகள், திண்டூா்பட்டியில் 7 ஆடுகள், தீவெட்டிக்காட்டில் 6 ஆடுகள் என மொத்தம் 29 ஆடுகள், ஒரு பன்றி மா்ம விலங்கு கடித்து இறந்துள்ளன.
அந்த விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமரா 33 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அரசுத் துறை மூலம் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வனச்சரக அலுவலா் தலைமையில் களப் பணியாளா்களைக் கொண்ட சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
ஆடுகளை இழந்த உரிமையாளா்களுக்கு ரூ.78 ஆயிரம் வரையில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு அதிகாரிகள் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். வனத் துறையினா் துரிதமாக செயல்பட்டு மா்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மா்ம விலங்கு நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, ஆடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரண உதவித்தொகையை சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, ஆட்சியா் ச.உமா, மாவட்ட வனத் துறை அலுவலா் சி.கலாநிதி ஆகியோா் நேரடியாக சென்று வழங்கினா்.
ஆய்வுக் கூட்டத்தில் உதவிஇயக்குநா் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல், பழங்குடியினா் நல திட்ட அலுவலா்(கொல்லிமலை) பா.கீதா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.