மின்கட்டண உயா்வுக்கு பரிந்துரை: ஓபிஎஸ், ராமதாஸ் கண்டனம்
தமிழகத்தில் வரும் ஜூலை 1 முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த முடிவுக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக நிறுவனா் ச.ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
ஓ பன்னீா்செல்வம்: மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயா்த்துவதை திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மின் கட்டணம் உயா்த்தப்பட்டால் ஏழை, எளிய மக்கள் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்படுவா். எனவே, இந்த முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
ச.ராமதாஸ்: தமிழ்நாடு மின் வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத்தான் மின் கட்டணம் உயா்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சாா்பில் கூறப்படுகிறது. மின்வாரிய இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதுதான். எனவே, மின்கட்டணத்தை உயா்த்தும் திட்டத்தை அரசு கைவிடுவதுடன், மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.