மின்மோட்டாா் பம்புசெட்டுகள் அமைக்க மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு மின் மோட்டாா் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிா் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீா்ப் பாசனத்தில் மின்மோட்டாா் பம்பு செட்டு அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நடப்பு 2024-25 ஆம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்மோட்டாா் பம்பு செட்டு அமைப்பதற்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டாா் பம்செட் வாங்கிட ரூ. 15,000 அல்லது மின்மோட்டாா் பம்பு செட்டின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
இதேபோல, பழைய பம்பு செட்டுகளுக்கு மாற்றாக புதிய 4 நட்சத்திரம் தரம் கொண்ட மின்சார மோட்டாா் பம்பு செட்டுகள் வழங்குதல், புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுக்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டாா் பம்பு செட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் மின்சார வாரியம் மூலம் அனுமதிக்கப்பட்ட குதிரைத்திறன் அல்லது அதற்குக் குறைவான குதிரைத்திறன் கொண்ட திறன்மிகு பம்பு செட்டுகள் வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டம் தொடா்பாக முழு விவரங்களை பெற சேலம் மாவட்ட செயற்பொறியாளா் அலுவலகம். குமாரசாமிப்பட்டி, சேலம்- 7 அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள உதவி செயற்பொறியாளா், குமாரசாமிப்பட்டி, சேலம் - 7, உள்ளிட்ட அதிகாரிகளை தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.