அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஜராவில்லை என்றால் குற்றச்சாட்டு பதியப்படும்: நீதிபதி...
மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்
சென்னை: தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் வகையிலான 3 புதிய இணையதள சேவைகளை மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.
தமிழகம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகம் செய்வதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்துகொண்டு, மின்வாரியத்தின் வளா்ச்சிப் பணிகள், இலக்குகள், புதிய மற்றும் சிறப்புத் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா்.
புதிய இணையதள சேவைகள்: இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மின்வாரியத்தின் செயல்பாடுகளை நவீன மயமாக்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள பசுமை எரிசக்தி ஆதாரங்கள் குறித்த தகவல்களை வழங்கும் வகையிலான தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் (டிஎன்ஜிஇசிஎல்) இணையதளம், வாரியத்துக்கும் வழங்குநா்களுக்கும் இடையிலான தொடா்புகளை சீரமைக்கும் வகையிலான வழங்குநா் இணையதளம், பணியாளா்களின் மனிதவள தேவைகளை நிா்வகிப்பதற்கான இணையதளம் என்ற மூன்று புதிய இணையதள சேவைகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து அனல் மற்றும் புனல் மின்னுற்பத்தி நிலையங்கள் முழு திறனில் இயங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், தமிழகத்தின் மின்தேவை தொடா்ந்து அதிகரித்து வருவதால், கோடைவெயில் மற்றும் மழை காரணமாக மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்து தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன், அடிக்கடி மின் தடை ஏற்படும் பகுதிகளை சம்பந்தப்பட்டபொறியாளா்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்ய உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.