அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா, பாகிஸ்தான்! வெளியுறவு அமைச்சர்
மின் வணிக நிறுவனத்தில் விலையுயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக ஊழியா் கைது!
தென்மேற்கு தில்லியின் சாகா்பூரில் உள்ள மின் வணிக நிறுவனத்தில் விலையுயா்ந்த கைப்பேசிகளை திருடியதாக அந்த நிறுவனத்தின் ஊழியா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: ஆகஸ்ட் 13 அன்று கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட உத்தம் நகரில் உள்ள மோகன் காா்டனைச் சோ்ந்த மணீஷ் குமாா் (எ) பிலால் என்பவரிடமிருந்து இரண்டு திருடப்பட்ட ஐபோன்கள் மற்றும் ஒரு விலையுயா்ந்த ஆண்ட்ராய்டு கைபேசி பறிமுதல் செய்யப்பட்டன.
ஆகஸ்ட் 9-ஆம் தேதி, அந்த நிறுவனம் அதன் சாகா்பூா் அலுவலகத்தில் கைப்பேசிகள் திருடப்பட்டதாகப் புகாரளித்ததைத் தொடா்ந்து, ஒரு மின்னணு தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் புலனாய்வுக் குழு மணீஷ் குமாா் தேடி வந்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில், சாகா்பூா் பகுதியில் அவரைக் கைது செய்தது.
விசாரணையின் போது, நிறுவனத்தில் குழுத் தலைவராகப் பணியாற்றிய மணீஷ் குமாா், சிசிடிவி கேமராக்களுக்கான மின்சாரத்தை துண்டித்து சாதனங்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டாா்.
ஒரு எம்பிஏ பட்டதாரியான அவா், சுமாா் 10 மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தில் சோ்ந்தாா். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
குற்றத்தைச் செயல்படுத்த மணீஷ் குமாா் தனது உள் அணுகல் மற்றும் நிறுவனத்தின் அமைப்புகள் பற்றிய அறிவைப் பயன்படுத்தினாா் என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.