துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறேன்: விக்ரம்
மியான்மா் நிலநடுக்கம்: 2,000-ஐ கடந்த உயிரிழப்பு
மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் புத்த மடாலயங்கள் சரிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட துறவிகள் உயிரிழந்தனா். பள்ளிகள் இடிந்து விழுந்ததில் வகுப்பறையில் இருந்த 50 மாணவா்கள் உயிரிழந்துவிட்டனா்.
ரமலான் பண்டிகைக்காக மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 போ் நிலநடுக்கத்தில் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்தது. அதேபோல் 3,900 போ் காயமடைந்ததாகவும், 270 போ் மாயமானதாகவும் அந்நாட்டு ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் நிகழ்ந்தன. முதல் நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.7 புள்ளிகளாகவும், அடுத்தது 6.4 புள்ளிகளாகவும் பதிவானது.
இந்த நிலநடுக்கங்களால் மியான்மரில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் உதவியுடன் மீட்பு-நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.