மீன்பிடி தடைக்காலம்: கடல் மீன்கள் வரத்து குறைந்தது
தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை கடல் மீன்கள் வரத்து குறைந்திருந்தது.
வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்தும் வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. வார நாள்களில் நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைந்திருந்தது. இதனால், மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
அதன்படி, வஞ்சிரம் ரூ.1,200 முதல் ரூ.1,400, தேங்காய்பாறை ரூ.400, சங்கரா ரூ.250 முதல் ரூ.400, இறால் ரூ.350 முதல் ரூ.500, வெள்ளை கொடுவா ரூ.500 முதல் ரூ.1,000, கலங்கா ரூ.220, ஏரி விரால் ரூ.500, நண்டு ரூ.350 முதல் ரூ.450, ஏரி, குளங்களில் வளரும் வவ்வால் மீன்கள் கிலோ ரூ.120 முதல் ரூ.150, ஜிலேபி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டன. வரும் 40 நாள்களுக்கு இதே நிலைதான் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.
அதேநேரம் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.