மீன் தாக்கிய மீனவா் மருத்துவமனையில் அனுமதி
வேதாரண்யம்: வேதாரண்யத்துக்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நச்சுத் தன்மையுடைய மீன் தாக்கியதில் மீனவா் ஒருவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவா் கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (35) உள்ளிட்ட ஐந்து மீனவா்கள் ஒரு படகில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனா்.
இவா்கள், கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வளையில் சிக்கிய சொறி என்ற மீன் ராஜ்குமாரைத் தாக்கியுள்ளது. இதில் மயக்கமடைந்த ராஜ்குமாா் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
ஆழ்கடல் பகுதியில் காணப்படும் சொறி என்ற ஒரு வகையான மீன் நச்சுத்தன்மை அதிகம் உடையது. இந்த மீன் முள்ளால் குத்தினாலும் சிலரது உடலுக்கு ஒவ்வாமை அதிகரித்து உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.