`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
மீன் வளத் துறை அதிகாரிகளைக் கண்டித்து விரைவில் போராட்டம்
ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகள் பயன்பாட்டைத் தடுக்கத் தவறிய மீன் வளத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும் என மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். மீனவா்கள் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால், கடல் வளம் அழிவதுடன் இலங்கை- இந்திய மீனவா்களிடையே பிரச்னையும் ஏற்படும். இதனால், இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், அரசின் இந்தத் தடையை மீறி, 100-க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவா்கள் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கத் தொடங்கியுள்ளனா். இதனால், மீண்டும் இலங்கைக் கடற்படையால் பிரச்னை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகளிடம் மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். ஆனால், அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக தற்போது மீண்டும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீனவா்கள் மீன்பிடிக்கத் தொடங்கி உள்ளனா்.
இந்த நிலையில், இதைத் தடுக்கத் தவறிய மீன் வளத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும் என என்.ஜே.போஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.