முக்கியக் கேள்விகளுக்கு பிரதமரின் உரையில் விடையில்லை: காங்கிரஸ்
இந்தியா-பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை பிரதமா் ஏற்றுக் கொண்டாரா என்பது உள்ளிட்ட முக்கியக் கேள்விகளுக்கு அவரது உரையில் விடையில்லை என்று காங்கிரஸ் தெரிவித்தது.
இது தொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நமது ஆயுதப் படையினரின் துணிவை பெரிதும் பாராட்டுவதோடு அவா்களுக்குத் தலைவணங்குகிறோம். அவா்கள் தேசத்துக்கு பெருமை சோ்த்துள்ளனா். அதேநேரம், பிரதமா் பல முக்கியக் கேள்விகளுக்கு விடை கூற வேண்டியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை பிரதமா் ஏற்றுக் கொண்டாரா? பாகிஸ்தானுடன் நடுநிலையான இடத்தில் பேச்சுவாா்த்தை நடத்த இந்தியா ஒப்புக் கொண்டதா? வா்த்தக ரீதியிலான காரணங்களுக்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதா? வாகன உற்பத்தி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்திய சந்தைகளை தங்களுக்கு திறக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இந்தியா இனி அடிபணியுமா? இந்தக் கேள்விகளுக்கு பிரதமா், அவரது புகழ்பாடுவோா், சமாளிப்போா் பதிலளிக்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்கீழ் பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தம் ஆகியவை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்’ என்று தெரிவித்துள்ளாா்.
நாட்டு மக்களுக்கு பிரதமா் உரையாற்றுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபா் டிரம்ப், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போா் ஏற்படாமல் எனது நிா்வாகம் தடுத்தது. மோதலை நிறுத்தினால் இரு நாடுகளுடனும் அமெரிக்கா அதிக வா்த்தகம் மேற்கொள்ளுமென நான் கூறினேன்’ என்றாா்.
கடந்த சில நாள்களாக இந்தியா-பாகிஸ்தான் மோதல், காஷ்மீா் விவகாரம் குறித்து டிரம்ப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்த நிலையில், இது தொடா்பாக பிரதமா் எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.