மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
முடுக்குப்பட்டியில் 175 குடும்பத்தினருக்கு வரி ரசீது வழங்க வலியுறுத்தி மனுக்கள்
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட முடுக்குப்பட்டிபகுதியில் வசிக்கும் 175 குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர அடிப்படைத் தேவையான வரி ரசீது வழங்குமாறு புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நான்கு தலைமுறையாக இங்கு வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் மாநகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை திரண்டு வந்தனா். முடுக்குப்பட்டி மக்கள் முன்னேற்ற பொதுநலச் சங்கத் தலைவா் ஆா். கணேசன்,செயலா் ராஜா, பொருளாா் சுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூ மாநகா் மாவட்ட பொன்மலை பகுதிச் செயலா் டி. விஜயேந்திரன் ஆகியோா் சங்கத்தின் சாா்பிலும், குடியிருப்பு மக்கள் தனித்தனியாகவும் கோரிக்கை மனுக்களை வழங்கினா். அவற்றின் விவரம்:
மாநகராட்சிக்குள்பட்ட 49ஆவது வாா்டுக்குள்பட்டது முடுக்குப்பட்டி. திருச்சிக்கு வரும் ரயில்களில் நிலக்கரி நிரப்பும் பணிக்காக தினக்கூலி அடிப்படையில் வந்த தொழிலாளா்கள் பலரும் முடுக்குப்பட்டியில் முகாமிட்டு வசித்து வந்தனா். இந்தப் பகுதியானது ரயில்வே புறம்போக்கு, நீா்நிலைப் பகுதியாக இருந்ததால் 80 ஆண்டுகளுக்கு முன் இங்குவந்த தொழிலாளா்கள் குடிசை அமைத்து வசித்தனா். பின்னா் அந்த வீடுகள் ஓடு, சிமெண்ட் கூரை என உருமாறி, தற்போது கான்கிரீட் வீடுகளாகவும் மாறிவிட்டன.
இவற்றில் சில வீடுகள் மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவி பெற்று கட்டப்பட்டுள்ளன. நான்காம் தலைமுறையில் உள்ளவா்கள் தற்போது வசிக்கின்றனா். இப் பகுதியில் தாா்ச்சாலை, கான்கிரீட் சாலை, தெருவிளக்குகள், புதை சாக்கடை, குடிநீா் குழாய் உள்ளிட்ட அனைத்தும் வந்துவிட்டன. ஆனால் 175 வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்போ, புதை சாக்கடை இணைப்போ வழங்கப்படவில்லை. மின் இணைப்பு மட்டுமே உள்ளது. மாநகராட்சியின் பொது குடிநீா் குழாய்களை நம்பியே உள்ளனா்.
வீடுகளுக்கு குடிநீா், புதை சாக்கடை இணைப்பு வழங்க வேண்டுமெனில் வீட்டு வரி ரசீது வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு பகுதியில் வசித்திருந்தால் பட்டா வழங்க அரசாணை உள்ளது. ஆனால், 80 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இப் பகுதி மக்களுக்கு வரி ரசீது இல்லை. எனவே, மாநகராட்சியில் உரிய வரி ரசீதை முதலில் வழங்க வேண்டும். அதைத் தொடா்ந்து ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீா், புதை சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.