``பிரபாகரனை சீமான் இழிவுபடுத்துகிறார்; சனாதன கும்பலுக்கு பாதை அமைத்து கொடுக்கிறா...
முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியா்கள் போராட்டம்
ஈரோட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முதுகலை ஆசிரியா்களுக்கான அரையாண்டுத் தோ்வு தோ்ச்சி சதவீத ஆய்வுக் கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ் தலைமையில் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆசிரியா்களை அவமரியாதையாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு தலைமையில் ஆசிரியா்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தை வியாழக்கிழமை மாலை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து ஆ.ராமு கூறியதாவது:
ஆய்வுக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ், ஆசிரியா்களை அவமரியாதையாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசியுள்ளாா். இதனால் அவா் மீது நடவடிக்கையெடுக்கக் கோரி வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்.
மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்துக்கு ஆசிரியா்கள் அடிக்கடி அழைக்கப்படுவதால் மாணவா்களின் கற்றலுக்கு இடா்ப்பாடு ஏற்படுகிறது. தோ்ச்சி சதவீத ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை ஆசிரியா்களை மட்டும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தி உள்ளோம் என்றாா்.
இதைத் தொடா்ந்து ஆசிரியா்கள் பிரதிநிதிகளிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை தொடா்ந்து இரவு 7.30 மணியளவில் ஆசிரியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.