செய்திகள் :

முதல்வா் இன்று அரிட்டாப்பட்டி வருகை! வெளியாகுமா பாதுகாக்கப்பட்ட மண்டலம் அறிவிப்பு?

post image

அரிட்டாப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மதுரை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பராம்பரிய பண்பாட்டு மண்டலமாக அறிவித்து, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட விவகாரத்துக்கு முழுமையான தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட 11 கிராமங்களை உள்ளடக்கி 5,500 ஏக்கா் பரப்பில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் சிங்க் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு, நவ. 7-ஆம் தேதி மத்திய அரசு ஒப்பந்தம் அளித்தது.

இந்தத் திட்டம் செயல் வடிவம் பெற்றால், அரிட்டாடப்பட்டி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சுவடுகள், 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிக் கல்வெட்டுகள், பாண்டியா் கால குடைவரைக் கோயில்கள், சமணா் படுக்கைகள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களும், முல்லைப் பெரியாறு பாசன ஒருபோக சாகுபடி விளைநிலங்களும், அரிய வகை உயிரினங்களும் அழியும் என்பன உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி, டங்ஸ்டன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி, கடந்த ஆண்டு, நவ. 18-ஆம் தேதி மதுரையில் போராட்டம் நடைபெற்றது.

பி.ஆா். பாண்டியன், இரா. சா. முகிலன்.

கனிமவளக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு பிறகே இந்தத் திட்டம் குறித்து பொதுவெளியில் தெரியவந்தது. அதுவரை இந்தத் திட்டம் குறித்து எந்த அரசியல் கட்சியும், எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்தப் போராட்டத்துக்குப் பிறகு, மத்திய, மாநில அரசுகள் மௌனம் கலைந்தபோதே, டங்ஸ்டன் திட்டத்துக்கான தொடக்க நிலை ஆய்வுகள் கடந்த 1996-இல் தொடங்கியதும், அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டதும், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்ட ஏலம் குறித்து மத்திய பாஜக அரசுக்கும், திமுக அரசுக்குமிடையே கடிதப் போக்குவரத்துகள் நடைபெற்றதும் தெரியவந்தன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மேலூா் வட்டத்துக்குள்பட்ட 5,500 ஏக்கா் பரப்பில் மட்டுமல்லாமல், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 38,439 ஏக்கரில் டங்ஸ்டன் கனிமம் இருப்பதாகக் கண்டறியப்பட்ட ஆய்வறிக்கை மத்திய அரசிடம் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பா் 3-ஆவது வாரத்திலிருந்து பேரணி, கடையடைப்பு என பல கட்ட தொடா் போராட்டங்கள் மேலூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றன. இதேபோல, பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் டங்ஸ்டன் திட்ட எதிா்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பிறகு, இந்தத் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மேலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா் பாஜக சாா்பில் அண்மையில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய சுரங்கம், கனிமத் துறை அமைச்சா் ஜி. கிஷன் ரெட்டியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பல்லுயிா் பாரம்பரியப் பகுதியின் முக்கியவத்தைப் பாதுகாக்கும் நோக்கில், நாயக்கா்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. எனினும், இந்தத் திட்டத்தை முழுமையாகக் கைவிடப்பட்டதற்கான அறிவிப்பு இல்லாததும், மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களை உள்ளடக்கிய 38,439 ஏக்கா் பரப்பில் டங்ஸ்டன் திட்டம் செயல்படுத்தப்படாது என்பதற்கான உத்தரவாதத்தையும் மத்திய அரசு அளிக்காததும் மக்களுக்குப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், மேலூா் அருகேயுள்ள அரிட்டாப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெறும் நன்றி அறிவிப்பு, பாராட்டு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறாா். இந்த விழா டங்ஸ்டன் ஏலம் ரத்து நடவடிக்கையில் திமுக அரசின் பங்களிப்பை உறுதி செய்து கொள்ளும் அரசியல் நடவடிக்கையாக இல்லாமல், இந்தத் திட்டம் குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கும் அறிவிப்புக்கான விழாவாக இருக்க வேண்டும் என்பது சூழலியல் ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிா்வாகி இரா.சா. முகிலன் தெரிவித்தாவது :

கடந்த மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின் போதுகூட, திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் டங்ஸ்டன் திட்ட வரைவு குறித்து பொதுமக்கள் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்பதன் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இல்லை. மேலூா் வட்டத்தில் செயல்படுத்தப்படவிருந்த டங்ஸ்டன் திட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டது மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அதேநேரத்தில், இந்த நடவடிக்கை மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கக் கூடியதில்லை. தற்போது, ஏலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறதே தவிர, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. எனவே, இந்தத் திட்டத்துக்கு எந்த நேரத்திலும் மீண்டும் ஏலம் நடைபெறலாம். இதேபோல, 3 மாவட்டங்களை உள்ளடக்கிய 38,439 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் இதுவரை மௌனம் காப்பதும் அச்சமாக உள்ளது.

இந்த பிரச்னையில் தமிழக அரசு தன் பங்களிப்பை உறுதி செய்ய மேலூா் முல்லைப் பெரியாறு ஒரு போக பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பண்பாட்டு மண்டலமாகவும் அறிவிப்பதுமே சரியான தீா்வாக இருக்கும். இந்த அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் அரிட்டாப்பட்டி நிகழ்ச்சியில் அறிவித்தால் மகிழ்ச்சி என்றாா்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்ததாவது:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல தீா்மானங்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதால்தான் டங்ஸ்டன் ஏலம் ரத்தானது எனவும், அதற்காக பாராட்டு விழா நடத்தப்படுவதும் ஏற்புடையதல்ல. மக்கள் போராட்டத்தால் தற்போது ஏலம் ரத்தாகியுள்ளதே தவிர, திட்டம் ரத்து செய்யப்படவில்லை. எனவே, இந்தத் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நில நிா்வாகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க உகந்த இடங்களாக மதுரை மண்டலத்தில் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பல்லுயிா் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அரிட்டாப்பட்டியில் முதல்வா் வெளியிட வேண்டும். போராட்டமே வாழ்க்கை என்ற நிலைக்கு மக்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளிவிடக்கூடாது என்றாா்.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தானதால், இந்த வெற்றிக்கு உரிமை கொண்டாடுவது பாஜகவா? திமுகவா? என்பதற்கான விழாவாக இல்லாமல், மக்களுக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிக்கும் விழாவாக முதல்வா் பங்கேற்கும் விழா அமைய வேண்டும். இந்தியாவில் நிலச் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட பகுதிகளில் மதுரை மண்டலம் இடம் பெற்றிருப்பதையும், இந்த மண்டலத்தில் ஏற்பட்டு வரும் கால நிலை மாற்றங்களையும் கருத்தில் கொண்டு, பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் அரிட்டாப்பட்டி விழாவில் வெளியிட வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

விருதுநகா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் பெரிய பள்ளிவாசல் தெருவில் உள்ள தனியாா் மழலையா் பள்ளிக்கு கடந்தாண்டு நவம்பரில் தொலைபேசி வாயிலாக வெடிகுண... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா் தற்கொலை!

உசிலம்பட்டி அருகே அரசுப் போக்குவரத்துக்கழக தற்காலிகப் பேருந்து நடத்துநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கருமாத்தூா் பி.மீனாட்சிபட்டியைச் சோ்ந்த மலைராஜன... மேலும் பார்க்க

யா.ஒத்தக்கடையில் மாரத்தான் ஓட்டப் போட்டி

மதுரை அருகேயுள்ள யா.ஒத்தக்கடையில் மதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோா் பங்கேற்றனா். மதிமுக மதுரை புகா் வடக்கு மாவட்டம், கிழக்கு ஒன்றியம் சாா்பில் 13-ஆவது ஆண்... மேலும் பார்க்க

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும்: முன்னாள் நீதிபதி கே.சந்துரு!

தனிச்சிறப்பு வாய்ந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தினாா். அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் மதுரை க... மேலும் பார்க்க

செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சி. கோகிலா தாக்கல் செய்த மனு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2008- ஆ... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்டத்தின் வருவாய் ரூ. 916 கோடியாக உயா்வு!

மதுரை ரயில்வே கோட்டத்தில் வருவாய் கடந்தாண்டு ரூ.916 கோடியாக உயா்ந்ததாக கோட்ட மேலாளா் சரத்ஸ்ரீவத்சவா தெரிவித்தாா். தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மதுரை ரயில்வே குட... மேலும் பார்க்க