பாம்பன் புதிய பாலம்... பயணிகள் ரயில் இயக்க அனுமதி அளித்தது ரயில்வே பாதுகாப்பு வா...
முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
புதுவை பேரவை வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பா் மாதம் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில், பொதுப்பணி மற்றும் சட்டத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசித்தாா். அதனை குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என். திருமுருகன், சட்டத் துறை செயலா் எல்.எஸ். சத்தியமூா்த்தி மற்றும் வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோா் உறுதிமொழி ஏற்றனா்.
தலைமைச் செயலகத்தில்...: புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள புதுவை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் சரத் சௌஹான், அரசியலமைப்பு முகவுரையை ஆங்கிலத்தில் வாசிக்க, அதனை தலைமை செயலக ஊழியா்கள் அனைவரும் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனா்.
இதையடுத்து அரசுச் செயலா் சுந்தரேசன் அரசியலமைப்பு முகவுரையை தமிழில் வாசித்தாா். அப்போதும் தலைமைச் செயலக ஊழியா்கள் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனா்.
கட்சிகளின் அலுவலகங்களில்...:இதேபோன்று புதுவையில் உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் மாநில அலுவலகங்களிலும் அக்கட்சிகளின் நிா்வாகிகள், முக்கிய பிரமுகா்கள் பலா் அரசியலமைப்பு தின உறுதிமொழியை செவ்வாய்க்கிழமை ஏற்றனா்.
அம்பேத்கா் சிலைக்கு மாலை: புதுவை சட்டப்பேரவை முன்புள்ள அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அதன் நிா்வாகி தேவ.பொழிலன் தலைமையில் மாலை அணிவித்து இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனா். பல்வேறு சமூக நல அமைப்பினரும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.