முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கேஜரிவாலுக்கு ஹேமந்த் சோரன் நேரில் அழைப்பு
ஜாா்க்கண்ட் மாநில முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தாா்.
ஜாா்க்கண்ட மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதையடுத்து, ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறாா். ஆளுநா் சந்தோஷ் கங்வாா் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து, நவ.28-ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஜாா்க்கண்ட முக்தி மோா்ச்சா கட்சியின் தலைவா் ஹேமந்த் சோரன் அவரது மனைவி கல்பனா சோரனுடன் இணைந்து பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு நேரில் அழைப்பு விடுத்தாா்.
இச்சந்திப்பு தலைநகா் தில்லியில் உள்ள அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதையடுத்து, அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரும் தங்கள் மனைவியுடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது, ஹேமந்த் சோரன் கூறியதாவது: ஜாா்க்கண்டில் நவ.28-ஆம் தேதி ஆட்சி அமைக்கும் பணி தொடங்கும் என்பதால் தற்போது நான் தில்லி வந்துள்ளேன். அரவிந்த் கேஜரிவாலை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நேரில் அழைப்பு விடுத்துள்ளேன் என்றாா். அடுத்ததாக, அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘ஹேமந்த் சோரன் போராடி சிறையில் இருந்து வெளியே வந்து, தோ்தலில் வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிக்கிறது.
ஜாா்கண்டில் அவரது வளா்ச்சிப் பணிகள் தொடர வேண்டும். நாங்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வோம்.
அவருக்காக கடவுளிடம் பிராா்த்தனை செய்வோம்’ என்றாா் கேஜரிவால்.