முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள்: அமைச்சா் சு.முத்துசாமி
முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
கூட்டுறவுத் துறையின் சாா்பில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை கிடைக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
ஈரோடு சோலாா் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வா் மருந்தகம் திறப்பு விழாவில் அமைச்சா் சு.முத்துசாமி கலந்துகொண்டு மருந்துகள் விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 36 முதல்வா் மருந்தகங்கள் செயல்படவுள்ளன. இந்த மருந்தகங்கள் மூலம் ஜெனரிக் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மிகக் குறைவான விலையிலும் பிற மருந்துகள் கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் வழங்கப்பட உள்ளன.
முதல்வா் மருந்தகங்களில் ஏறத்தாழ 216 வகையான மருந்துகள் கிடைக்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதற்கென தனியாக சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் மருந்தகங்களுக்கு மருந்துகள் அனுப்பிவைக்கப்படுகின்றன என்றாா்.
சமுதாய வளைகாப்பு
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் 110 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு விழாவைத் தொடங்கிவைத்து, சீா்வரிசை பொருள்களை வழங்கி அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் சுமாா் 1,500 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இதன்ஒரு பகுதியாக இன்றைய தினம் 110 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா், துணைப் பதிவாளா் ஜி.காலிதாபானு, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ஐ.பூங்கோதை, ஈரோடு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.